புதன், 19 ஜூலை, 2017

உரிமைக்கு பின்னே உள்ள கடமை ! | வெற்றி

உறவுகளாலும் , நட்புகளாலும் பின்னி பிணைந்துள்ள நமக்கு, ஒவ்வொரு கால கட்டத்திலும்  புது புது மக்களின் அறிமுகம் கிடைக்க தான் செய்கிறது. சிறு வயதில் ஒரு வகை அறிமுகம், நடுத்தர வயதில் ஒன்று என , மக்களுக்கும் நமக்கும் உள்ள உறவுகள் புதுபிக்கப் பட்டு கொண்டே உள்ளன. கடமைகளும் புதுப்பிக்க பட்டு கொண்டே உள்ளன .

எத்தனை கடமைகள் ? மகனாக, அண்ணனாக, தம்பியாக, கணவனாக, தந்தையாக, மருமகனாக, மாமாவாக , சித்தப்பாவாக, நல்ல மாமனாராக, நல்ல நண்பனாக, நல்ல குடிமகனாக என எத்தனை கடமைகள்! இத்தனை கடமைகளோடும் பின்னி பிணைந்துள்ள நாம், அனைத்து  நம் பங்களிப்புகளில்  உள்ள உரிமைகளை மட்டும் தவறாமல் மறக்காமல் கேட்கின்றோம் !

ஆனால், எத்தனைப் பேர் கடமைகளை சரியாக செய்து விட்டு , உரிமைகளை எதிர் பார்க்கின்றோம்? கை விட்டு எண்ணி விடலாம். கடமைகளை சரியாக ஆற்றாதவருக்கு உரிமைகளை பேச தகுதி இல்லை.

கணேசன் ஒரு ஏழை பட்டறை தொழிலாளி. ஒரு சிறிய ஓட்டு வீடு தான் அவர் சொந்தம். இருப்பதை வைத்து சிறப்பான வாழ்க்கை. அவரின் உடன் பிறந்தோர் 5 பேர். அவர்களின் படிப்பிற்காக தன் படிப்பை துறந்தவர் கணேசன். சகோதர்கள் அனைவரும் வெளி நாட்டில் நல்ல வேலைகளில் கை நிறைய பணத்துடன் உள்ளனர். கணேசனுடன், உறவாட அவர்களுக்கு நேரமில்லை. எங்கே உறவாடினால் , பணம் கொடு என கணேசன் கேட்டு விடுவாரோ என்று.

அவர்களுக்கு தெரியவில்லை, தன் படிப்பையே இவர்களுக்காக துறந்தவர் , அன்பிற்காக ஏங்குவாரா அல்லது பணத்திற்காக உறவு கொண்டாட நினைப்பாரா ? அப்படியே பணத்தை எதிர் பார்த்தாலும் தவறில்லை.ஏனெனில் , கணேசன் ஆற்றிய கடமை அவ்வாறு.

காலங்கள் கடந்தது. சகோதர்கள் வீட்டு திருமணத்திற்கு , சித்தப்பாவாக கணேசன் செய்ய வேண்டிய கடமைகள் காத்து இருந்தன. சகோதர்களாக இத்தனை வருடங்கள் எந்த கடமைகளையும் கணேசனுக்கு செய்யாத , சகோதர கூட்டம் , சித்தப்பாவாக அவரின் கடமைகளை செய்ய சொல்லி நிர்பந்திக்கிறது.

இத்தனை வருடங்கள் இல்லாத சொந்தங்கள் திடீர் என வந்து , கணேசனின் அந்த கிராமத்தில் உள்ள செல்வாக்கை பயன் படுத்தி , திருமணங்களை நல்ல முறைகளில் உறவுகளின் முன் முடித்து தரக் கோரி நிர்பந்திக்கிறது.

இப்பொழுது, கணேசன் அமைதியாக உள்ளார். சகோதரராக பிறந்து விட்டோம் என்ற கடனுக்காக , திருமணங்களுக்கு சென்று வந்தார். பழையதை,  கணேசனுக்கு ஆற்ற வேண்டிய கடமையை, அனைத்து சொந்தங்களும் மறந்து விட்டன . இப்படி ஒரு கடமைகளை செய்யாத சித்தப்பாவா என சொந்தங்கள் கணேசனை ஏசின , கடமைகளை செய்யாத சொந்தங்கள், உரிமைகளை மட்டும் பலமாக எதிர் பார்த்து ஏசின. இது தான் உலகம் !

உரிமைகளை எதிர் பார்க்கும் முன் , முதலில் கடமைகள் பார்க்கப் பட வேண்டும். கடமைகள் ஆற்றிய பின் , எதிர் பார்க்கும் உரிமைகள் என்றும் வாழும் . ஆனால்... ஆற்றாத கடமைக்கு எதிர் பார்க்கும் உரிமைகள், தகுதி இல்லாதவை. எத்தனை பேரை கூட்டு சேர்த்து கூவினாலும் , வலு இல்லாத சத்தம் அது. நியாயம் இல்லாதது.

அனைத்து வேண்டா செயலையும் செய்து விட்டு , இறுதியில் உரிமைகளை விலை கொடுத்து வாங்கி விட எண்ணங்கள் இருந்தால் மறந்து விடுவது , நலனை காக்கும். அனைத்து மனிதர்களும் விலை போக மாட்டார்கள். உரிமைகளுக்கான விலை கடமைகள் தான், வேறு எந்த விலைகளும் அதற்கு ஈடாகாது. கடமைகளை ஆற்றும் எண்ணங்களை வளர்த்து கொண்டால்,  உரிமைகள் தானாக நிறைவேற்றப் படும். 

கடமையை மட்டும் பிறரிடம் இருந்து எதிர்பார்த்து விட்டு , உரிமையை கொடுக்காமல் இருப்பதுவும் தவறே !

குழந்தைகளுக்கு வேண்டும் என பார்த்து பார்த்து கடமையாற்றும் பெற்றோர் , தனக்கான உரிமையை எதிர் பார்க்கும் பொழுது, குழந்தைகள் மறுக்கும் பொழுது, தவறு ஏற்படுகிறது. கடமையை சரி வர ஆற்றாத பெற்றோர், உரிமையை மட்டும் எதிர் பார்க்கும் பொழுது , அங்கும் தவறு தான் ஏற்படுகிறது.

மாற்றம் வேண்டும் புரிதலுடன்!


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக